வேலூர், பிப்.10: வேலூரில் புதிய பஸ் நிலையம் அருகே குடிக்க பணம் கேட்டு கணவர் தாக்கியதால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி தனது 2வயது குழந்தையை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் தனுஷ். இவரது மனைவி சினேகா. தம்பதிக்கு 2வது மகள் உள்ளார். இந்நிலையில் தஞ்சாவூரில் வசிக்கும் சினேகாவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த சினேகா, தந்தையை பார்க்க தனது குழந்தை ரித்திகாவுடன் நேற்று புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்சில் ஏற வந்தாக கூறப்படுகிறது. அப்போது மனைவியை பின்தொடர்ந்து வந்த அவரது கணவர் தனுஷ், மது குடிக்க ₹150 தருமாறு கேட்டுள்ளார். ஆனால் சினேகா தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் தனுஷ் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கிவிட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சினேகா, நீயும் வேண்டாம் உன் குழந்தையும் வேண்டாம் எனக்கூறி 2வது வயது குழந்தையை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளார். காயமடைந்த குழந்தையும் கதறி அழுதுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் இதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சாலையில் இருந்த 2வயது குழந்தையை அங்கிருந்தவர்கள் மீட்டனர். உடனடியாக சிறிது தொலைக்கு சென்று கொண்டு இருந்த தாய் சினேகாவும் மீண்டும் குழந்தையிடம் திரும்ப வந்தார். தூக்கி வீசியதில் காயம் அடைந்த குழந்தைக்கு அங்கிருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் உடனடியாக அவர்கள் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post குடிக்க கணவர் பணம் கேட்டு தாக்கியதால் சாலையில் 2வயது குழந்தையை தூக்கி வீசிய பாசக்காரதாய் appeared first on Dinakaran.