குஜராத்தில் இன்று தொடக்கம்; காங். செயற்குழு 2 நாள் ஆலோசனை: கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்பு

2 weeks ago 3

அகமதாபாத்: குஜராத்தில் இன்று தொடங்கும் காங்கிரஸ் செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. 2 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற குழுத்தலைவர் சோனியா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இன்று சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடி ஆலோசனை செய்கிறது. அதை தொடர்ந்து நாளை சபர்மதி ஆசிரமத்திற்கும், கோச்ராப் ஆசிரமத்திற்கும் இடையே சபர்மதி நதிக்கரையில் நாடு முழுவதும் இருந்தும் 1725 மூத்த நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டிய சூழலில் குஜராத்தில் நடக்கும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் பீகார் சட்டப்பேரவை தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி அமைக்க வசதியாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், வேட்பாளர் தேர்வில் மாவட்ட தலைவருக்கு அதிகாரம் வழங்குதல், தேர்தல் வெற்றி, தோல்விக்கு பொறுப்பேற்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியில் புத்துயிர் அளிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாத்மா காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்று 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளையும் குறிக்கும் வகையில் குஜராத்தில் இந்த முறை காங்கிரஸ் செயற்குழு, பொதுக்குழு கூடுவது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1885 டிசம்பர் 28ல் நிறுவப்பட்டது.
  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23-26 வரை முதல் பொதுக்குழு செயற்குழு நடந்தது.
  •  குஜராத்தில் இரண்டாவது முறையாக சூரத்தில் 1907 டிசம்பர் 26-27 அன்று ராஷ் பிஹாரி கோஸ் தலைமையில் கூடியது.
  •  மூன்றாவது முறையாக அகமதாபாத்தில் 1921 டிசம்பர் 27-28 வரை ஹக்கீம் அஜ்மல் கான் தலைமையில் கூடியது.
  •  1938ல் குஜராத் ஹரிபுராவில் 1938 பிப்ரவரி 19-21 வரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 4வது முறையாக கூடியது.
  • 1961ல் பாவ்நகரில் ஜனவரி 6-7 தேதிகளில் நீலம் சஞ்சீவ ரெட்டியின் தலைமையில் 5வது முறையாக கூடியது.

The post குஜராத்தில் இன்று தொடக்கம்; காங். செயற்குழு 2 நாள் ஆலோசனை: கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article