குஜராத்தில் 40 ஆண்டுகளாக தானம் ஒரே குடும்பத்தில் 27 பேர் 630 லிட்டர் ரத்த தானம்

3 months ago 17

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 27 பேர் 40 ஆண்டுகளாக 630 லிட்டர் ரத்தம் தானம் செய்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ரமேஷ் பட்டேல் என்பவரது குடும்பத்தினர் ரத்த தானம் செய்வதில் சாதனை படைத்துள்ளனர். 1985ம் ஆண்டு பிப்ரவரி முதல் இவர்கள் இந்த தானத்தை தொடங்கி உள்ளனர். அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அந்த குடும்பத்தை சேர்ந்த 27 பேர் தொடர்ந்து ரத்த தானம் செய்து வந்துள்ளனர். அவர்கள் இதுவரை 1,400 யூனிட்கள் அல்லது 630 லிட்டர் ரத்தத்தை தானம் செய்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் 100 முறைக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளனர். அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 44 வயதான டாக்டர் மவுலின் படேல் குஜராத்தில் மிக இளம் வயது செஞ்சுரியன் ரத்த தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த குடும்பத்தில் 16 நபர்கள் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளனர். டாக்டர் மவுலின் படேலின் தந்தை அசோக் படேல் (72), தாய் சகுந்தலா (71) ஆகியோர் 98 முறை ரத்த தானம் செய்துள்ளனர். சத்ய சாய் பாபா கடந்த 1985ல் அகமதாபாத் நிகழ்ச்சியில்,’ ரத்தம் திரவமான அன்பு. அதை மற்றவர்களிடம் பாய்ச்சுவோம்’ என்று கூறியதால் ஈர்க்கப்பட்ட ரமேஷ் பட்டேல் முதன்முதலாக ரத்ததானம் செய்துள்ளார். அவரின் வழியாக தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் ரத்ததான சேவையில் ஈடுபட்டுள்ளது. இதை தொடங்கி வைத்த 76 வயதான ரமேஷ் பட்டேல் 94 முறை ரத்த தானம் செய்துள்ளார். ரமேஷ் பட்டேலின் மகள் டிம்பிள், மகன் அமுல், ரமேஷ் பட்டேலின் சகோதரர் பாரத் பட்டேல் ஆகியோர் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகிறார்கள்.

The post குஜராத்தில் 40 ஆண்டுகளாக தானம் ஒரே குடும்பத்தில் 27 பேர் 630 லிட்டர் ரத்த தானம் appeared first on Dinakaran.

Read Entire Article