செய்யூர்: கீழ் மருவத்தூர்-வெங்கடேசபுரம் இடையே உள்ள 3 கிலோ மீட்டர் தார் சாலை குண்டும் குழியுமாக மாறியதால் புதிய தார் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ் மருவத்தூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல இந்த 3 கிமீ நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு, கடந்த 10 வருடங்களுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. அதன்பின் புதிய சாலை ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால், நாளடைவில் இந்த சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. தற்போது, இப்பகுதியில் புதிய தொழிற்சாலைகள், வீடுகள் கட்டப்பட்டு வருவதால் இப்பகுதியில் ஏராளமான டிப்பர் லாரிகள் இரவும் பகலுமாக வந்த வண்ணம் உள்ளன. இதனால், சாலை மேலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இந்நிலையில், இதர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கனரக வாகனங்கள் சாலையில் செல்லும்போது, புழுதி படர்ந்து வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. மேலும், இந்த பகுதியில் மதுபான கடை உள்ளதால் மது அருந்திவிட்டு செல்பவர்கள் சாலையில் மேடு பள்ளம் தெரியாமல் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தொடர் விபத்துகளை தடுக்க இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கீழ் மருவத்தூர் – வெங்கடேசபுரம் இடையே குண்டும் குழியுமான தார் சாலை: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.