திருப்புவனம் : கீழடியில் 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் மேற்பார்வையில் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் மற்றும் தொல்லியல் மாணவர்கள் ஆகியோருடன் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவஹர், கார்த்திக், பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான நிலங்களில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இதுவரை 8 அடிக்கும் மேலான ஆழத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை பாசி மற்றும் கண்ணாடி மணிகள், ‘தா’ என்ற ‘தமிழி’ எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அகழாய்வில் ஒவ்வொரு நாளும் அரிய தொல்பொருட்கள் கிடைத்து வருவது தொல்லியல் துறை அலுவலர்களுக்கும் தொல்லியல் ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதுவரை தோண்டப்பட்ட 8 குழிகளிலும் 5 பெரிய பானைகள், 20க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான பானைகள் என மொத்தம் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று வட்ட வடிவத்தில் சுடுமண் தொட்டியின் வாய்ப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று ஏராளமான சான்றுகள் கிடைத்து வருகின்றன. இன்னும் கூடுதல் குழிகளில் அகழாய்வு பணிகளை விரிவுபடுத்தினால் நடக்கும் ஏராளமான அரிய தொல்பொருட்கள் கிடைக்கும் என தொல்லியல் துறையினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
The post கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு appeared first on Dinakaran.