பெய்ரூட்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கிழக்கு லெபனானின் கவர்னரேட் பால்பெக்-ஹெர்மெல் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர் என்று கவர்னர் பச்சீர் கோடர் தெரிவித்துள்ளார்.
கவர்னரேட் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன, அழிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போனவர்களை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய ராணுவம் நேற்று தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் 48 வான்வழி தாக்குதல்களை நடத்தியதாகவும், அதே சமயம் தெற்கு லெபனானில் உள்ள 18 எல்லை நகரங்கள் மற்றும் கிராமங்களை குறிவைத்து சுமார் 100 குண்டுகள் வீசியதாகவும் லெபனான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.