மதுரை: மதுரை அருகே கிளாமர் காளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரபல ரவுடி நேற்று மாலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் 2 போலீசார் காயமடைந்தனர். மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவர்கள் கீரைத்துறையை சேர்ந்த வி.கே.குருசாமி, அதிமுகவைச் சேர்ந்த ராஜபாண்டி. இருவர் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 22 ஆண்டுகளாக காலமாக இருதரப்பிலும் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வருகின்றன. இதுவரைக்கும் இருவர் தரப்பிலும் 20க்கும் மேற்பட்டோர் கொலையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை, மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த வி.கே.குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் என்ற கிளாமர் காளி. இவர் திருநகர் அருகேயுள்ள தனக்கன்குளம் பகுதியில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் மொட்டமலை பகுதியில் கடந்த வாரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவரை சிறையில் உள்ள வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த சிலர் கொலை செய்து தலைமறைவாக இருந்தனர். இவ்வழக்கில் தனிப்படை போலீசார், நந்தகுமார்(20), முத்துகிருஷ்ணன், அசேன், கார்த்திக், நவீன் குமார், பாலகிருஷ்ணன் மற்றும் சண்முகவேல், இவரது மனைவி ஜெயக்கொடி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கிளாமர் காளி கொலை வழக்கில் வெள்ளைக்காளியின் முக்கிய கூட்டாளியும், பிரபல ரவுடியுமான மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(28) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே நேற்று மாலை 6.30 மணிக்கு மதுரை ரிங்ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால், காரில் சென்றவர்கள் நிறுத்தாமல் காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். உடனே, போலீசார் காரை விடாமல் விரட்டிச் சென்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய 2 பேர், போலீசாரை வீச்சரிவாளால் வெட்ட முயன்றும், துப்பாக்கியாலும் சுட முயன்றனர். அப்போது போலீசை இருவரையும் பிடித்தனர். இந்த முயற்சியின்போது கர்ணன், சரவணக்குமார் ஆகிய 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
அப்போது தற்காப்புக்காக ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், துப்பாக்கியால் சுட முயன்றபோது, குண்டு காரில் இருந்த சுபாஸ் சந்திரபோஸ்சின் நெஞ்சில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்து, பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார். இது குறித்து கீரைத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். வேகமாக ஓட்டிச் சென்ற காரில், கஞ்சாவை கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நேற்று மாலை நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி நடந்தது என்கவுன்டர்..? மதுரை கமிஷனர் விளக்கம்
மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறுகையில், ‘‘காரில் கஞ்சா கடத்தியவரை செக்போஸ்டில் நிறுத்தியபோது நிறுத்தாமல் சென்றனர். பின்னர் பெருங்குடி டேல்கோட்டில் நிறுத்த முயன்றபோது, போலீசாரை தள்ளிவிட்டு காட்டுப்பகுதிக்கு காரை திருப்பி விட்டனர். அதனை தொடர்ந்து 2 போலீசார் காரில் இருந்தவர்களை கைது செய்ய சென்றபோது, போலீசாரரை வீச்சரிவாளால் வெட்டி விட்டு துப்பாக்கியால் சுட முயன்றனர். அப்போது இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காக சுட்டபோது, காரில் இருந்த சுபாஸ் சந்திரபோஸின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார். சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றபோது இதுபோன்ற சம்பவம் நடந்தது. நுண்ணறிவு மூலம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
The post ‘கிளாமர் காளி’ கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்; மதுரையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: துப்பாக்கி, ஆயுதம் பறிமுதல் appeared first on Dinakaran.