குஜராத்தில் கிருஷ்ணனை “துவாரகாதீஷ்’’ என செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர். அவரை சிறுவன், மகாராஜா, தெய்வம் என பல வடிவங்களில் வழிபடுகிறார்கள். அந்த வகையில், முதலில் துவாரகையில் உள்ள துவாரகதீஷ் கோயிலுக்கு செல்வோம்.
16 – ஆம் நூற்றாண்டு
இதனை உலகின் கோயில் என கிருஷ்ண பக்தர்கள் அழைக்கின்றனர். 5 தமிழக ஆழ்வார்கள் இந்த இறைவன் குறித்து பத்துப் பாடல்களை மங்களாசாசனம் செய்துள்ளனர். கோயில் சௌராஷ்டிராவின் கடலோரத்தை ஒட்டி அமைந்துள்ளது. இன்றைய கோயில் மேலைச்சாளுக்கியர் பாணியில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மூலவர் கிழக்கு நோக்கியுள்ளார். இந்த கோயிலே பெரிய அரண்மனை போன்றது. கோமதி நதிக்கரையில் உள்ளது.
ஸ்னானம் செய்துவிட்டு அங்கிருந்து 55 படிகள் ஏறினால் கோயிலை அடையலாம். கோயில் கோபுரம் 43 மீட்டர் உயரம் கொண்டது. நான்கு நிலை கொண்ட கோபுரம். இதன் உச்சியில் 52 அடி நீளம்கொண்ட சிவப்பு பட்டுத் துணியில் சூரிய, சந்திரர்கள் வரையப்பட்டு இருக்கிறது. தினமும் மூன்று முறை ஏற்றி இறக்கப்படுகிறது. 10கிலோமீட்டர் தொலைவிலிருந்தே இது தெரியும்.
கிருஷ்ணன் பேரன்
2500 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணனின் பேரன் வஜ்ரநப் என்பவரால் இந்த கோயில் எழுந்துள்ளது. கோயில் 5 மாடிகள் கொண்டது. 60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்களை வழி நெடுக காணலாம். கோயில் நடுவில், பெரிய மண்டபம் உள்ளது. கருவறையில் துவாரகதீஷ்க்கு தலையில் கொண்டையுள்ளது. நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு தினமும் மூன்று விதமான அலங்காரம். காலையில் பாலகிருஷ்ணன், அடுத்து மகாராஜா அலங்காரம், மூன்றாவதாக இயல்பான அலங்காரம். இவற்றின் இடையே மொத்தம் 11 பிரசாதங்கள் நிவேதனம் செய்யப்படுகின்றன. புதுப்புது ஆடைகள் மாற்றப்படுகின்றன. காலையில் எழுந்ததும், அவருக்கு தங்க பல்குச்சியால் பல் தேய்க்கப்படுகிறது.
உடனே சாப்பிட லட்டு, ஜிலேபி தருகின்றனர். எட்டு மணிக்கு சர்க்கரை, பால், தயிர், அப்பளம், அக்காரம் பாலில் கலந்து நிவேதனம். இதனால் வயறு பாதிக்கப்படாமல் இருக்க அடுத்து லேகியமும் உண்டு. கோயிலினுள், ருக்மணி, துளசி, பலராமர், சுபத்ரா, துர்வாசர் என பலர் அருள்கிறார்கள்.
கடலில் மூழ்கியது
துவாரகை இதுவரை ஆறு தடவை கடலில் மூழ்கியுள்ளது. இப்போது இருப்பது 7வது என்கின்றனர். கோயில் விஜயம் செய்ய சிறந்த காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை.
ஆனால் பக்தர்கள் வருடம் முழுவதும் வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று இங்கு பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இது தவிர்த்து பல விழாக்கள் வருடம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. இந்த கோயிலின் இரு நுழைவு வாயில்களை சொர்க்கம், மோட்சம் என அழைக்கின்றனர்.
* பின் குறிப்பு: பக்தை மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்து வந்து இங்குதான் இறைவனுடன் இணைந்தாள்.
* கோபி தலாப்: துவாரகையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரி. இது கிருஷ்ணனுடன் தொடர்புடையது. புராண கதையின் படி இந்த ஏரி கிருஷ்ணனின் குழந்தை பருவ நினைவுகளை குறிக்கிறது. கிருஷ்ணன் இல்லாததால் ஏங்கிப் போன கோபியர்கள், இந்த இடத்துக்கு வந்து கிருஷ்ணனிடம், “நீ எங்களுடன் நடனமாட வா..’’ என அழைக்க, கிருஷ்ணன் அவர்கள் அழைப்பை ஏற்று ராஸ் நடனம் இணைந்து ஆடினான். வாழ்க்கையில் எங்களுக்கு இந்த திருப்தியே போதும் என அனைவரும் மண்ணோடு மண் ஆயினர். இவர்கள் மண்ணில் புதைந்த இடம், மென்மையான மஞ்சள் நிறமாக உள்ளது. இந்த மண்ணை கோபி சந்தனம் அல்லது கோபிகளின் சந்தனம் எனச் சொல்லி பக்தர்கள் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்கின்றனர்.
* பேட் துவாரகா: இது துவாரகாவிலிருந்து 32 கி.மீ. கட்ச்வளைகூடாவின் முகப்பில் உள்ள ஓகாவிலிருந்து 3கி.மீ. கிருஷ்ணன் மாளிகை கட்டி கொண்டு தங்கிய இடம். இந்த அரண்மனையில் இன்று கிருஷ்ணனுக்கு சிலை உள்ளது. இதனை ருக்மணி செய்து தந்ததாக கூறப்படுகிறது. இங்கு கிருஷ்ணன் தவிர்த்து சிவன், விஷ்ணு, அனுமான், ருக்மணி மற்றும் மீராவுக்குகூட சந்நதிகள் உள்ளன.
இங்குள்ள கிருஷ்ணனை கேசவராஜ் என பெயரிட்டு அழைக்கின்றனர். இப்போது ஓகாவிலிருந்து பேட் துவாரகாவுக்கு பாலம் கட்டியுள்ளனர். சுதர்சன் பாலம் என அழைக்கப்படும் இதனை இந்த வருடம் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ராஜிராதா
The post கிருஷ்ணனின் பேரன் கட்டிய கோயில் appeared first on Dinakaran.