கிருஷ்ணகிரி: வெந்நீர் கொட்டி மூன்றரை வயது குழந்தை பலி

1 month ago 11

கிருஷ்ணகிரி,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 29). இவர் குடும்பத்துடன் ஓசூர் குமுதேப்பள்ளி அருகே பென்னாமடம் பகுதியில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

பூபாலனுக்கு அனிதா என்ற மனைவி மற்றும் 3½ வயதில் வேதாஸ்ரீ என்ற மகள் இருந்தாள். கடந்த 26-ந் தேதி காலை மகளை குளிப்பாட்ட குளியல் அறைக்கு அனிதா அழைத்து சென்றார். பின்னர் வீட்டில் அடுப்பில் சுட வைத்திருந்த வெந்நீரை பாத்திரத்தில் எடுத்து வந்து குளியல் அறையில் வைத்திருந்த வாளியில் ஊற்றினார்.

அதன்பிறகு துண்டு எடுத்து வர வீட்டுக்குள் சென்றார். இதனிடையே குளியல் அறையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வெந்நீர் வைத்திருந்த வாளியை பிடித்து இழுத்துள்ளாள்.இதில் எதிர்பாராதவிதமாக அந்த வாளி கவிழ்ந்து அந்த வெந்நீர் சிறுமி வேதாஸ்ரீ மீது கொட்டியது. இதில் உடல் வெந்து வலியில் அந்த சிறுமி அலறினாள். உடனே அங்கு ஓடி வந்த தாய் உடல் வெந்து வலியால் அலறி துடித்த தனது மகளை உடனடியாக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி வேதாஸ்ரீ தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Read Entire Article