கிரிக்கெட்டின் அழகே ஜீரோவில் இருந்து தொடங்குவதுதான் - இந்திய அணியின் கேப்டன் பும்ரா

1 week ago 4

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா இல்லாததால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார்.

முன்னதாக இந்தியா அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியதால் இதில் குறைந்தபட்சம் 4-0 என்ற கணக்கில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் விளையாட உள்ளது.

இந்நிலையில் முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் பும்ரா ஜாம்பவான் கபில் தேவ் போல வேகப்பந்து வீச்சாளரான தம்மால் இந்தியாவை நன்றாக வழி நடத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக செயல்பட வேண்டும் என்பதற்கு நான் எப்போதும் ஆதரவு கொடுத்துள்ளேன். ஏனெனில் தந்திரோபாயங்கள் அடிப்படையில் அவர்கள் சிறந்தவர்கள். பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் நிறைய ரோல் மாடல்கள் இருக்கிறார்கள். கபில் தேவ் போன்ற நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த காலங்களில் கேப்டன்ஷிப் ரோல் மாடல்களாக செயல்பட்டுள்ளார்கள். அதே போல நாமும் புதிய கலாச்சாரத்தை துவங்குவோம் என்று நம்புகிறேன்.

ஒருவேளை நீங்கள் அந்த தொடரில் (நியூசிலாந்து தொடரில்) வெற்றியை சந்தித்திருந்தாலும் இங்கே ஜீரோவிலிருந்துதான் இத்தொடரை தொடங்க வேண்டும். தோல்வியை சந்தித்தாலும் நீங்கள் ஜீரோவில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதுதான் கிரிக்கெட்டின் அழகாகும். டி20 உலகக் கோப்பை வென்றதால் மற்ற தொடர்களில் நாங்கள் திருப்தியடைவோம் என்று அர்த்தமல்ல.

கண்டிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான கடினமான தொடரில் நாங்கள் ஏமாற்றத்தை சந்தித்திருந்தோம். ஆனால் அங்கிருந்து நாங்கள் எந்த பளுவையும் எடுத்து வரவில்லை. தற்போது புத்துணர்ச்சியுடன் இங்கே நாங்கள் வித்தியாசமான மனநிலையுடன் வந்துள்ளோம். இந்தியாவில் சந்தித்த தோல்வியிலிருந்து நாங்கள் எதையும் எடுத்து வரவில்லை. நாங்கள் இங்கே நேர்மறையுடன் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்" என்று கூறினார்.

Read Entire Article