
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 12 சுற்றுலா பயணிகள் காயம் அடைந்துள்ளனர். பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜம்மு- காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இறந்தவரின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது, குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.
சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளித்தேன், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினேன். அவசர பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காக விரைவில் ஸ்ரீநகருக்குச் செல்வேன்" என்று அதில் கூறியுள்ளார்.