சத்ரபதி சம்பாஜி நகர்: “370வது சட்டப்பிரிவை மீட்டெடுத்து காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனத்தை உருவாக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன” என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். மகாராஷ்டிரா பேரவை தேர்தலையொட்டி சத்ரபதி சம்பாஜி நகரில் நேற்று நடந்த பாஜ பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீரில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் மட்டுமே இருக்க வேண்டுமென ஒவ்வொரு இந்தியரும் விரும்புகிறார்கள்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை பாஜ நீக்கியதை, நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் காங்கிரஸ் எதிர்த்தது. தற்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 370 சட்டப்பிரிவை மீட்டெடுப்பதற்கான தீர்மானத்தை ஜம்மு காஷ்மீர் பேரவையில் நிறைவேற்றி உள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனத்தை உருவாக்க காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் முடிவு செய்துள்ளன” என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “மகாராஷ்டிராவின் அவுரங்கபாத் நகரின் பெயரை சத்ரபதி சம்பாஜி நகர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென சிவசேனா தலைவர் பால் தாக்கரே விரும்பினார். பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி அவுரங்கபாத் நகரை சத்ரபதி சம்பாஜி நகர் என பெயர் மாற்றம் செய்து பால் தாக்கரேவின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளது” என தெரிவித்தார்.
The post காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனத்தை உருவாக்க காங். முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.