மாமல்லபுரம், ஏப். 27: காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மாமல்லபுரம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு, தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநில சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு பயணிகள் என ஏராளமானோர் சொகுசு பேருந்து, மினி பேருந்து, வேன், கார் மற்றும் பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் மாமல்லபுரம் வருகின்றனர். அப்படி வருபவர்கள் பல்லவ மன்னர்கள் கை வண்ணத்தில் அழகுர செதுக்கிய வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூனன் தபசு, கிருஷ்ணா மண்டபம், ஐந்து ரதம், கடற்கரை கோயில், புலிக்குகை உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, அதன் முன் நின்று தங்களது செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து, ஒன்றிய அரசு நாட்டின் எல்லைகள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள், ராணுவ கிடங்குகள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோயில், புலிக்குகை உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒன்றிய அரசின் செக்யூரிட்டிகள் மூலம் தொல்லியல் துறை நிர்வாகம் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
நேற்று, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வந்த உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளை வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோயில் நுழைவு வாயில் பகுதியில் தடுத்தி நிறுத்தி அவர்களின் கைபைகள், உணவு கொண்டு வந்த பைகள் முழுமையான பரிசோதனைக்கு பிறகே புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர். அப்போது, தொல்லியல் துறை செக்யூரிட்டிகள் காஷ்மீர் துப்பாக்கி சூடு சம்பவத்தை எடுத்து கூறினர். இதையடுத்து, பயணிகள் தங்களது உடமைகளை பரிசோதிக்க ஒத்துழைப்பு வழங்கினர்.
The post காஷ்மீரில் துப்பாக்கி சூடு தாக்குதல் எதிரொலி மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தீவிர சோதனை appeared first on Dinakaran.