காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; ராணுவ வீரர் வீர மரணம்

4 hours ago 3

ஜம்மு,

காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டம் வசந்த்கார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவல் கொடுத்தது. அதன்பேரில், காஷ்மீர் போலீசாரும், ராணுவத்தின் சிறப்பு படையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை கண்டறிந்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தினர். அவர்களை சரண் அடையுமாறு உத்தரவிட்டனர். அதை ஏற்காமல், பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். எனவே, பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

அதில், ராணுவத்தின் சிறப்பு படையை சேர்ந்த ஒரு வீரர், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனின்றி வீர மரணம் அடைந்தார். அவர் பெயர் ஜான்டு அலி ஷேக்.''ஜான்டு அலி ஷேக்கின் தைரியமும், அவரது குழுவின் வீரமும் மறக்க முடியாது. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்துக்கு ராணுவம் துணைநிற்கும்'' என்று ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடந்தது. சண்டைக்கு பிறகு, சந்தேகத்தின்பேரில் 4 பேர் விசாரணைக்காக பிடித்துச் செல்லப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில், ஜம்முவில் நடந்த 3-வது துப்பாக்கி சண்டை இதுவாகும். நேற்று முன்தினம் குல்கம் மாவட்டம் தங்மார்க் பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்தது. பாரமுல்லா மாவட்டம் உரி நலா பகுதியில் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள், துப்பாக்கி சண்டைக்கு பிறகு கொல்லப்பட்டனர்.மேலும், உத்தம்பூர் மாவட்டத்தின் வசந்த்கார் பகுதில் கடந்த ஓராண்டில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.

Read Entire Article