சென்னை: காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் சென்னையில் இருந்து சென்றிருந்த 26 பேர் ஸ்ரீநகரில் சிக்கி தவித்தனர். தமிழ்நாடு அரசு அனுப்பிய சிறப்பு மீட்பு குழு அவர்கள் 26 பேரையும் பத்திரமாக மீட்டு ஸ்ரீநகரில் இருந்து விமானம் மூலம் நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய 26 பேரையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த 147 பேர், காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளாக சென்றிருந்தனர். தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக, முதலமைச்சர் எடுத்த உடனடி நடவடிக்கையால் அவர்களில் 146 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக விமானங்கள், ரயில்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் வீடுகளுக்கு அரசு வாகனங்களில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 146 பேரும் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்து விட்டனர். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.
The post காஷ்மீரில் இருந்து மேலும் 26 பேர் சென்னை வந்தனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.