
ஜம்மு,
காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் புனித யாத்திரை கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள்.அந்தவகையில் ஜம்முவின் பகவதி நகர் முகாமில் தங்கியிருந்த 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் 2 குழுக்களாக நேற்று அதிகாலையில் பஹல்காம் அடிவார முகாமுக்கு புறப்பட்டனர்.
இதில் ஒரு குழுவினர் சென்ற ஏராளமான பஸ்கள் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. காலை 8 மணியளவில் ராம்பன் மாவட்டத்தின் சந்தர்கோட் அருகே சென்றபோது, அணிவகுப்பின் கடைசி பஸ்சின் பிரேக் பழுதானதாக தெரிகிறது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒடிய அந்த பஸ், பிற பஸ்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 5 பஸ்கள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்தன.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர விபத்தில், 36 பக்தர்கள் லேசான காயமடைந்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு ராம்பன் மாவட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அங்கே சிகிச்சை பெற்ற அவர்கள் மீண்டும் யாத்திரையில் இணைந்தனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வேறு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதனால் சிறிது நேரம் தடைபட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது.இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா, மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தார்.
மேலும் காயமடைந்தவர்களின் நிலை குறித்து அறிந்து கொண்ட அவர், மேற்கொண்டு புனித யாத்திரை சுமுகமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதைப்போல மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கும் மாவட்ட துணை கமிஷனரிடம் தொலைபேசியில் பேசி விபத்து குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், 'கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது' என குறிப்பிட்டு இருந்தார். அமர்நாத் பக்தர்கள் சென்ற பஸ்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.