மீனம்பாக்கம்: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய 19 பேர் இன்று அதிகாலை விமானம் மூலமாக சென்னை வந்து சேர்ந்தனர். பஹல்காம் பைசர் பள்ளத்தாக்கு பகுதிக்கு நாங்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்றதால், பயங்கரவாத தாக்குதலிலிருந்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினோம் என்று அதிர்ச்சியுடன் பேட்டியளித்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் பயங்கரவாத கும்பலின் துப்பாக்கி தாக்குதலில், அங்கு சுற்றுலாவுக்கு சென்றிருந்த 26 பேர் பரிதாபமாக பலியாகிவிட்டனர். அங்கு பதட்ட சூழல் நிலவும் நிலையில், தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த மதுரையை சேர்ந்த 14 பேர், சென்னையை சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 19 பேர் நல்வாய்ப்பாக பயங்கரவாத தாக்குதலில் இருந்து உயிர் தப்பி, தமிழ்நாடு அரசின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு, காஷ்மீரில் இருந்து ஐதராபாத் வழியாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் விமானம் மூலமாக சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
சென்னை விமானநிலையத்தில் பயங்கரவாத தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய 19 பேரையும், அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் 19 பேரும் உறவினர்களுடன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் நிருபர்களை சந்தித்து உயிர் தப்பிய 19 பேரும் பேசுகையில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதிக்கு நாங்கள் சுற்றுலாவாக செல்லவிருந்தோம். ஆனால், நாங்கள் அங்கு 3 மணி நேரம் தாமதமாக செல்ல நேர்ந்ததால், பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல் தெரிந்து விடுதிக்கு திரும்பியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினோம் என்று கலக்கத்துடன் தெரிவித்தனர்.
இதுபற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நர்சிங் சூபரின்டென்டாக வேலைபார்க்கும் ஆனந்தி என்பவர் கூறுகையில், தமிழ்நாடு ஆட்டோமொபைல் அசோசியேசன் சார்பில், கடந்த 19ம் தேதி 70 பேர் குழுவினருடன் நாங்கள் மதுரையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு முதல் 2 நாட்கள் ஜம்மு-காஷ்மீரின் குளிர்ந்த சூழலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தோம். அங்கு ராணுவ வீரர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருந்தனர். மேலும், ஹெலிகாப்டர் மூலம் வானில் வட்டமிட்டபடி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து 3ம் நாள் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காம் பைசர் பள்ளத்தாக்கு பகுதிக்கு புறப்பட்டோம். ஆனால், எங்களுக்கு நடுவழியில் ஷாப்பிங் செய்வதில் அதிக நேரமானதால், பஹல்காம் பைசர் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்ல சுமார் 3 மணி நேரம் தாமதமானது. இதனால் நாங்கள் மொத்தம் 70 பேரும் பயங்கரவாத தாக்குதலில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினோம். முன்னதாக, நாங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்றிருந்தால், அங்கு பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியிருப்போம்.
பின்னர் வாகன ஓட்டிகளின் சிறப்பான செயல்பாடுகள் மூலம், எங்கள் அனைவரையும் பத்திரமாக விடுதிக்கு அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள் மற்றும் மத்திய-மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன், நாங்கள் (19 பேரும்) பத்திரமாக சென்னை வந்து சேர்ந்திருக்கிறோம். இங்கிருந்து நாங்கள் மதுரை செல்வதற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாங்கள் அனைவரும் மறுபிறவி எடுத்து வந்திருப்பதாக உணர்கிறோம். இதுதொடர்பாக நாங்கள் ராணுவ அதிகாரிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று ஆனந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
The post காஷ்மீரிலிருந்து சென்னை வந்தனர்; தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்துக்கு தாமதமாக சென்றதால் தப்பினோம்: உயிர் தப்பிய 19 பேர் பேட்டி appeared first on Dinakaran.