சேலம்: ''தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்கான காவிரி நீரை, சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதை ஏற்க மாட்டோம். நீதிமன்றத்துக்கு செல்வோம்'' என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தை அடுத்த எடப்பாடியில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ''சென்னை மெரினாவில் நடைபெறும் விமானப் படை சாகச நிகழ்ச்சியை காண வாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதனால், மக்கள் லட்சக்கணக்கானோர் கூடினர். ஆனால், போதிய அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்காததால் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் அரசின் செயலற்ற தன்மையைக் கண்டிக்கிறோம்.