காவல்துறை சார்பில் ரூ.56.27 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

1 month ago 6

சென்னை: தமிழ்நாடு காவல் துறை சார்பில் காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள் கட்டிடங்கள் உள்பட ரூ.56.27 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை ரூ.461.62 கோடியில் 2786 காவலர் குடியிருப்புகள், ரூ.55.04 கோடியில் 47 காவல் நிலையக் கட்டிடங்கள், ரூ.98.91 கோடியில் 16 காவல்துறை இதர கட்டிடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் ஆகியவை காவல்துறையினரின் மேம்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, காவல்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக வளாகத்தில் ரூ.10 கோடியே 27 லட்சத்து 86 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இணையதள குற்ற ஆய்வக வளாகம் என மொத்தம் ரூ.56 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள 169 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள் மற்றும் 2 காவல் துறை கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தேனி மாவட்டம் – போடிநாயக்கனூரில் ரூ.2 கோடியே 12 லட்சத்து 34 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 10 குடியிருப்புகள், சென்னை மாவட்டம், தியாகராய நகர் மற்றும் மணலி ஆகிய இடங்களில் ரூ.6 கோடியே 80 லட்சத்து 16 ஆயிரம் செலவிலும் கட்டப்பட்டுள்ள 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் என மொத்தம் ரூ.18 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதேபோன்று, தடய அறிவியல் துறைக்கு தஞ்சாவூரில் ரூ.3.75 கோடியில் கட்டப்பட்டுள்ள தடய அறிவியல் மரபணு ஆய்வகப் பிரிவுக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், டிஜிபி சங்கர் ஜிவால், தீயணைப்புத்துறை இயக்குநர் அபாஷ் குமார், காவல் உயர் பயிற்சியக இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் சைலேஷ் குமார் யாதவ், தடய அறிவியல் துறை இயக்குநர் (பொறுப்பு) வி.சிவப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post காவல்துறை சார்பில் ரூ.56.27 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article