காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது - கே.பாலகிருஷ்ணன்

2 months ago 10

மதுரை,

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 107-வது ஆண்டு நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு முனிச்சாலை புதுராமநாதபுரம் சிமெண்ட் சாலையில் தெற்கு பகுதிக்குழு அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழக காவல்துறை ஜனநாயக ரீதியாக நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். இது எந்த விதத்திலும் நியாயமில்லை. காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா, இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மக்கள் தங்கள் கருத்துகளை ஜனநாயக ரீதியாக தெரிவிப்பதை காவல்துறை மூலம் முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காவல்துறை சமூக விரோத செயல்களை அடக்குகிறோம் என்ற பெயரில் என்கவுன்டர் செய்வது, காவல் நிலையங்களில் சித்திரவதை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. இது மனித உரிமைகளை மீறுகிற செயல் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எல்லைமீறி செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூரில் சிறைத்துறை அதிகாரிகள் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்ததாக டிஐஜி உள்பட பலரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். சிறையிலிருப்பவர்களை சித்திரவதை செய்வதை தப்பு எனச் சொல்லும் அரசு காவல் நிலையங்களில் நடைபெறும் சித்திரவதைகளை மட்டும் ஏன் அனுமதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article