சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை வடபழனியில் பெண் வியாபாரி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமியை தட்டிக் கேட்டபோது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போக்குவரத்து காவலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பொதுமக்கள் தொடங்கி வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை தற்போது நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலையும், சட்டவிரோதமாக 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையையும் கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசால், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சென்னை வடபழனியில் போக்குவரத்து பெண் காவலரை தாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வரும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படையான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.