காளையார்கோவில் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

1 month ago 7

சிவகங்கை: காளையார்கோவில் அருகே 13ம் நூற்றாண்டு அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. காளையார்கோவில் அருகே விட்டனேரி கிராமத்தில் எழுத்துக்களுடன் கூடிய கல் ஒன்று கிடப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா மற்றும் நிர்வாகிகள் அங்கு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: விட்டனேரி கிராமத்தில் இருந்து பெரியகிளுவச்சி செல்லும் காட்டுப் பாதையில் இக்கல்வெட்டு கிடைத்துள்ளது. இது அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு ஆகும். ஆச்ரயம் என்ற வடசொல் கல்வெட்டுகளில் ஆசிரியம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆசிரியம் என்பது அடைக்கலம், பாதுகாப்பு மற்றும் ஆதரவை குறிக்கும்.

பொதுவாக அப்பகுதியை ஆள்பவர்கள் பாடிக் காவல் ஏற்படுத்தி ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட தான தர்மத்தை காத்தல் மற்றும் ஆதரவு வேண்டுவோருக்கு ஆதரவு அளித்தலை இவ்வகை ஆச்சரியம் கல்வெட்டு தெரிவிக்கிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் இரண்டு பக்கங்களில் கல்வெட்டுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

இது 13ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்துள்ளது. ஒரு பக்கத்தில் 12வரிகளும் மற்றொரு பக்கத்தில் ஒன்பது வரிகளும் இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு மூன்றடி உயரத்திலும் ஒன்றேகால் அடி அகலத்திலும் எழுதப்பட்டுள்ளது. ஸ்வஸ்தி  என தொடங்கும் இக்கல்வெட்டில் இவ்வூரானது கீழ் மங்கல நாட்டு வழுதி வாழ் மங்கலமான என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் வாளவ மாணிக்கத்து என்பது இப்பகுதியின் ஆட்சியாளரான மாளவ சக்கரவர்த்திகளை குறிக்கிறது. நிலையத்தில் இருப்பவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆசிரியம் என்று ஒரு பக்கத்தில் முடிகிறது. மற்றொரு பக்கத்தில் மேலைக் கோட்டையான கலங்காத கண்டரான அஞ்சினார் புகலிடம் காத்தாற்கு இவ்வூர் ஆசிரியம் என்றும் வருகிறது. இக் கல்வெட்டில் குறிக்கப்படும் மங்கல நாடு என்பது கீழ் மங்கல நாடு மேல் மங்கல நாடு என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது.

இது திருக்கானப் பேர் கூற்றத்தில் அமைந்திருந்தது. இவை இன்றைய காளையார்கோவில் சிவகங்கை வட்டங்களை உள்ளடக்கியதாகும். ஆசிரியம் கல்வெட்டு இதுவரை தமிழகப் பகுதியில் 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும் புதுக்கோட்டைப் பகுதியில் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சிவகங்கை பகுதியில் முடிகண்டம் மற்றும் சக்கந்தியில் இவ்வகை கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இக்கல்வெட்டு சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

The post காளையார்கோவில் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article