காளைகளைக் கையாளும் சிங்கப் பெண்கள்!

16 hours ago 1

தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரம் என பல அம்சங்களை ஒருங்கே கொண்ட பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகைதான். தங்களின் உழவுத் தொழிலுக்கு எவையெல்லாம் உறுதுணையாக இருக்கின்றனவோ அவற்றை நன்றியோடு நினைத்துப் பார்க்கும் இந்த நன்னாள் நிச்சயம் தமிழர்களின் பொன்னாள்தான். இத்தகைய பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டு இல்லாமல் முழுமை பெறுமா? என்ன? தை 1ம் தேதியான இன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று (நாளை) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு ஜரூராக நடைபெறும். நாளை மறுநாள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அசத்தலாக நடைபெறும். இதைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தென்மாவட்டங்களில் பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு என தொடர்ந்தபடி இருக்கும். இதற்காக ஜல்லிக்கட்டு காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தொடர் பயிற்சிகள் கொடுத்து தயார் படுத்தி வந்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரை நிமிர்ந்த திமில், பார்வையில் திமிர் என கெத்தாக வரும் காளைதான் மெயின் ஹீரோ. களத்தில் ஆக்ரோஷமாக பாய்ந்தோடும் இக்காளைகள், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒரு செல்லப் பிள்ளைகளைப் போல் பழகி வருவது ஒரு பாசக்கதையாக இருக்கும். மதுரை உட்பட தென்மாவட்டங்களில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயது பெண்களும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் செல்லமாக பழகி வருவார்கள். அவ்வாறு ஜல்லிக்கட்டுக் காளைகளை செல்லக்குட்டிகளாக வளர்த்து வரும் சிங்கப்பெண்கள் குறித்த ஸ்பெஷல் டேட்டா கலெக்‌ஷன்.

சிங்கப்பெண் 1:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையைச் சேர்ந்த கண்ணன் – சாந்தி தம்பதியிடம் 8 காளைகள் இருக்கின்றன. இந்தக் காளைகளின் கன்ட்ரோல் மொத்தமும் சாந்தியிடம்தான். காளைகளுக்கு தீவனம் வழங்குவது, நடைப்பயிற்சி, நீச்சல், ஓட்டப்பயிற்சிகளை அளிப்பது எல்லாம் இவர்தான். இவர்களின் குலதெய்வத்தின் பெயரைக் குறிப்பிடும் வகையில் ஒரு காளைக்கு மென்டல் மறை என பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதுவரை சுமார் 60க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகளில் மென்டல் மறை வெற்றி வாகை சூடி இருக்கிறது. எந்தப் போட்டியிலும் இதுவரை பிடிபட்டதில்லை. உள்ளூர் போட்டிகளில் மட்டும் கலந்துகொண்ட மென்டல் மறை உள்ளிட்ட காளைகள் இந்த ஆண்டு முதல் வெளியூர் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளன.‘‘எனது மகள், மகனைப் போலவே இந்தக் காளைகளை செல்லமாக வளர்த்து வருகிறேன். ஜல்லிக்கட்டு போட்டிகளில் துள்ளிக் குதித்து வெற்றி பெறும் ‘மென்டல் மறை’ வீட்டாரிடம் சிறு குழந்தை போல் சாந்தமாக வாஞ்சையுடன் விளையாடும். பச்சைப்புல், வைக்கோல் என எதைக் கொடுத்தாலும் உட்கொள்ளும். தண்ணீருடன் சிறிது ரொட்டித்துண்டுகள், புண்ணாக்கு என எனது வசதிக்கேற்ப எதை போட்டு வைத்தாலும் உண்ணும். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் இக்காளைகளுடன் இருந்தால் அவை பறந்து விடும்’’ என காளைகளுக்கும் தனக்கும் உள்ள பந்தம் குறித்து பகிர்ந்து கொண்ட சாந்தி, “தற்போது தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி வருகிறது. குறிப்பாக, கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தை துவங்கி ஜல்லிக்கட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். அரசு ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களுக்கும் கடனுதவி மற்றும் அரசு வேலை வாய்ப்பு வழங்கினால் பேருதவியாக இருக்கும்” என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

சிங்கப்பெண் 2:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்த தவமணியின் மனைவி தேனம்மாள் கடந்த 5 ஆண்டுகளாக சுள்ளான் என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார். இந்தக் காளை தேனம்மாள் மற்றும் அவரது மகன் ரஜினி ஆகியோரின் சொல்லுக்குத்தான் கட்டுப்படும். சுள்ளான் காளையை தேனம்மாள் மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறார்.இதுகுறித்து தேனம்மாள் கூறுகையில், ‘‘சுள்ளான் காளையை கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வருகிறோம். சுள்ளான் இதுவரையில் அவனியாபுரம், ஆவியூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியிருக்கிறான். பரிசுகளையும் வாங்கி குவித்திருக்கிறான். தற்போது நடைபெறும் அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்க முடிவு செய்திருக்கிறோம். இதுவரை சுள்ளான் யாரிடமும் பிடிபட்டதில்லை. இதற்கு நீச்சல் பயிற்சி, கொம்புமண் எடுப்பு பயிற்சி உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளை வழங்கி இருக்கிறோம். சுள்ளானுக்கு பச்சரிசி, துவரம்பொட்டு, வாழைப்பழம், கடலை மிட்டாய் ரொம்ப இஷ்டம். இதுதவிர பச்சைப்புல், வைக்கோல் உள்ளிட்டவையும் உட்கொள்ளும். கரும்புள்ளிகளுடன் காணப்படும் எனது சுள்ளானை பலர் விலைக்கு கேட்டார்கள். முடியாது என கூறிவிட்டேன்’’ என்கிறார்.

சிங்கப்பெண் 3:

திருமங்கலம் அருகே பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மனைவி சித்ரா, சின்னான் என்ற காளையை வளர்த்து வருகிறார். கணேசன் வேலைக்குச் சென்று விடுவதால் சித்ராதான் சின்னானை பராமரித்து வருகிறார். மற்றவர்கள் நெருங்கினால் மிரட்டும் சின்னான் சித்ரா அருகே வந்தால் குழந்தையாகி விடுகிறான். ‘‘கடந்த 4 ஆண்டுகளாக எனது மகன் போல் சின்னானை வளர்த்து வருகிறேன். இதுவரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்தாண்டு முதல்முறையாக பங்கேற்க இருக்கிறான். கொம்புமண், நீச்சல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளை வழங்கி இருக்கிறோம். இரட்டைக் கயிறு போட்டுதான் சின்னானை அழைத்துச் செல்ல முடியும். அவ்வளவு முரண்டு பிடிப்பான். சிறப்பு உணவாக பேரீச்சம்பழம், பருத்தி, கம்பு, கேப்பைமாவு, துவரம்பொட்டு, கடலை மிட்டாய் வழங்குவோம். தினசரி வெளியே நடைபயிற்சி, ஓட்டப்
பயிற்சிக்கு அழைத்து செல்கிறேன்’’ என சின்னானைப் பற்றி பகிர்ந்துகொண்டார் சித்ரா.

சிங்கப்பெண் 4:

சிவகங்கை அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அருணுக்கு சிறுவயது முதலே ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். இவருக்கு 3 மகள்கள். 8ம் வகுப்பு படிக்கும் மூத்த மகள் குணநிலாவுக்கு தந்தையைப் போலவே காளைகள் வளர்ப்பில் அதிகப் பிரியம். இவர் அழகுவேல் என்ற காளையைக் கடந்த 4 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். அழகுவேல் காளை மீது ஏறி விளையாடுவது, உணவு கொடுப்பது, பயிற்சி கொடுப்பது, போட்டிகளுக்கு அழைத்துச் செல்வது போன்றவைதான் குணநிலாவுக்கு பிடித்தமான விசயங்கள். ஒருமுறை குணநிலா பள்ளிக்குச் சென்ற நேரத்தில், காளையைக் களத்திற்கு கொண்டு செல்ல தந்தை அருண் முயன்றார். கயிற்றை அவிழ்க்க விடாமல் முரண்டு பிடித்த அழகுவேல் கடைசியாக கொம்புகளால் முட்டி இருக்கிறான். அதன்பின் காளைகளை வளர்ப்பது, களத்திற்குக் கொண்டு செல்வது என அனைத்து இத்யாதிகளையும் மகளிடமே விட்டுவிட்டார் அருண்.
அதன்பின் சிவகங்கை மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு இந்தக் காளையை குணநிலா அழைத்துச் செல்வது வழக்கமாகி விட்டது. 30க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்று பல வெற்றிகளையும், பரிசுகளையும் அழகுவேல் காளை அள்ளி இருக்கிறது.

பொதுவாக போட்டி முடிந்தபிறகு காளை ஆக்ரோஷமாக காணப்படும். காளையை சமாதானப்படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல, ஆனால் அழகுவேல் காளை குணநிலா களத்திற்கு வந்ததும் சமாதானமும், சாந்தமும் நிறைந்தவனாகி விடுவான். சமீபத்தில் நடிகர் சூரி நடித்த ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் அழகுவேல் காளை ஆட்டோவை மறைத்து நிற்கும். அப்போது குணநிலா சொன்னவுடன் காளை வீட்டிற்கு செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். குணநிலாவின் அன்புக்கு கட்டுப்பட்டு போட்டிகளை வெல்லும் இந்தக் காளையை அப்பகுதி மக்கள் வியப்போடு பார்க்கிறார்கள். ‘‘அழகுவேல் காளையை என் மகள் பாசத்துடன் வளர்த்து வருகிறார். பள்ளி நாட்களில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தால், அன்று அழகுவேல் காளை எங்கும் செல்லாது. விடுமுறை நாட்களில் போட்டி நடந்தால் மட்டுமே என் மகள் களத்திற்கு கூட்டிச் சென்று வருவார்’’ என்ற கொசுறு தகவலை அருண் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

தொகுப்பு: சோழவந்தான் சந்திரன், திருமங்கலம் கார்த்திகேயன்,சிவகங்கை கார்த்திகைராஜா,மதுரை ஆனந்தகுமார், வெற்றி.

The post காளைகளைக் கையாளும் சிங்கப் பெண்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article