மார்கழி மாதத்தில் மரம், மட்டை எல்லாம் குளிரும், தை மாதத்தில் தரையெல்லாம் குளிரும் என கிராமப்புறங்களில் சொலவடை சொல்வார்கள். ஆம் இந்த இரண்டு மாதங்களைக் கடந்துவிட்டால் குளிர் சீசனை ஓரளவுக்கு கடந்துவிடலாம். குளிர் காலத்தில் மனிதர்களாகிய நாம் போர்வை, கம்பளி, வேட்டி, புடவை என நமக்கு கிடைப்பவற்றை எடுத்து போர்த்திக்கொண்டு குளிரைச் சமாளிக்கிறோம். வாயில்லா ஜீவன்களாகிய நாம் வளர்க்கும் கால்நடைகள் இந்தக் குளிரை எப்படி சமாளிக்கும்? குளிர் காலங்களில் ஏற்படும் சில அசவுகரியங்கள் கால்நடைகளுக்குப் பெரிய அளவிலான பாதிப்புகளைக் கொண்டு வரும். இதனால் கால்நடைகளுக்கு இந்தக் காலகட்டத்தில் சில பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது அவசியம். குளிர் காலத்தில் கால்நடைகளுக்கு எந்த மாதிரியான பராமரிப்புகளை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதை விளக்கும் பயனுள்ள தகவல்களின் தொகுப்பு இது.மனிதர்களைப் போலவே கால்நடைகளும் மழை, வெயில், பனிக்காலங்களில் அந்தந்த சீசனுக்கேற்ற சீதோஷ்ண விளைவுகளை எதிர்கொள்கின்றன. குளிர் காலமும் கால்நடைகளுக்கு தொல்லை தரும் ஒரு சீசனாக விளங்குகிறது. குளிர் காலம் கால்நடைகளை மோசமாக பாதிக்கும். இது அவற்றின் உடல்நிலையைப் பாதிப்படையச் செய்வதுடன் சில எதிர்விளைவுகளையும் உண்டாக்கிவிடும். மாடுகளில் பால் உற்பத்தியைக் கூட பாதிப்படையச் செய்யும். குளிர்ந்த காலநிலை விலங்குகளுக்கு உடல் மற்றும் உளவியல் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். குளிரான சூழல் கால்நடைகளின் இயல்பான செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். தீவனம் மேற்கொள்வதில் கூட சிக்கலை உண்டுபண்ணும். சரியான பராமரிப்பு நடவடிக்கைகள் மூலம் கால்நடைகளை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் உலவவைக்கலாம்.
குளிர்காலக் கால்நடைப் பராமரிப்பில் தண்ணீர் முக்கிய அம்சமாகும். இந்த சீசனில் நிறைய தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும். குளிர் காலத்தில், குறிப்பாக வறண்ட குளிர் காலத்தில் மாடுகளுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். மாட்டின் எடைக்கேற்ப தண்ணீர் வைப்பது அவசியம். மாடுகள் கட்டப்பட்டிருக்கும் கொட்டகைகளில் சுத்தமான தண்ணீர் இருப்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை மாடுகளின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். போதிய அளவில் தண்ணீர் வசதி இல்லையென்றால் மேலும் நோய்த்தொற்றுகள் உருவாகும். குறிப்பாக பெருங்குடல் பாதிப்புகள் உருவாகும். கொட்டகையில் சுகாதாரமான நீர் ஆதாரத்தை நிறுவுவதன் மூலம் கால்நடைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம். கால்நடைகள் போதிய அளவுக்கு தண்ணீரை உட்கொள்வதையும், அவற்றை முறையாக கழிவாக்கி வெளியேற்றுவதையும் நாம் கண்காணிக்க வேண்டும்.
குளிர் காலத்தைத் தாங்கும் பொருட்டு கால்நடைகளின் ஆற்றல் இருப்பை பராமரிப்பது முக்கியம். குளிர்காலம் தொடங்கும் முன்பாக ஒவ்வொரு விலங்கின் உடல்நிலையையும் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப அவற்றின் ஊட்டச்சத்துத் தேவையை சரிசெய்ய வேண்டும். குளிர்காலம் வந்தால் அவற்றுக்கு தேவையான தீவனம் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு, ஆற்றல் இழப்பு அதிகரித்தால் கால்நடைகளை எளிதாக நோய்கள் தாக்கிவிடும். போதுமான ஆற்றல் இல்லையென்றால் விலங்குகள் வெப்பத்தை உருவாக்குவதற்கு மிகுந்த சிரமத்தைச் சந்திக்க நேரிடும். இதன் காரணமாக அவற்றின் வெப்பநிலை குறைந்து உயிரிழப்பு வரையிலான பாதிப்பைக் கொண்டு வரும். பசுமாடுகள் மெலிந்த நிலையில் இருந்தால் அவற்றுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காது. ஊட்டச்சத்து கிடைக்கவில்லையென்றால் அவற்றால் போதிய ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாது. இது பால் உற்பத்தியைப் பாதித்து கன்று பராமரிப்பிலும் சிக்கலை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க மெலிந்த பசுக்களை மந்தையில் இருந்து பிரித்து தனியே அடைத்து ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் சிறந்த பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் தாதுப்பொருட்களுடன் தீவனம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கால்நடைகளுக்கு சரியான தங்கு மிடத்தை வழங்குவதும் குளிர்காலத்தை எதிர்கொள்ளும் முக்கிய வழிமுறை. விலங்குகள் மிகவும் சூடாக இருப்பதை உறுதி செய்வது அவசியம். மேய்ச்சல் பகுதிகளில் அல்லது மேய்ச்சல் நிலங் களில் மூடப்பட்ட கொட்டகைகளை அமைப்பது மேய்ச்சலின்போது ஏற்படும் வானிலை நிகழ்வுகளில் இருந்து தப்பிக்க வைக்கும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுகையில் வானிலை முன்னறிவிப்புகளைக் கேட்டு அறிந்துகொள்வது மிகுந்த பயன்தரும் செயலாக இருக்கும். மேய்ச்சலின்போது நீண்ட நேரம் கால்நடைகள் திறந்த வெளியில் உலவ அனுமதிக்கக்கூடாது. போதிய நேரத்தில் பட்டியில் அடைத்துவிடுவதே சிறந்த அணுகுமுறை. மழையைத் தொடர்ந்து பனி விழும் சூழல் நிலவும் இந்தக் குளிர் காலத்தில் தரைப்பகுதி ஈரமாக இருப்பது இயல்புதான். சில இடங்களில் சேறு கூட மிகுந்திருக்கும். இந்த சமயத்தில் கால்நடைகளை ஈரமான சேற்றில் நீண்ட நேரம் நிற்க வைக்கக்கூடாது. அவ்வாறு நிற்க நேர்ந்தால் கால் அழுகல் அல்லது த்ரஷ் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். கால்நடைகள் சேற்றில் அடைக்கப்படும்போது வெப்பத்தை உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கும். இந்த சிக்கலைத் தீர்க்க சேற்றுப் பகுதிகளில் சரளை அல்லது மரக்கட்டைகளைப் போடலாம். பால் கறக்கும் பசுக்களை மடி கிரீம்கள் மற்றும் களிம்புகள் மூலம் அமைதிப்படுத்த வேண்டும். அவை நன்கு ஓய்வெடுக்கும் வகையில் நிறைய வைக்கோல் உள்ளிட்டவற்றை சேகரித்து வைக்க வேண்டும். பசுக்களுக்கு ஓய்வை அதிகரிப்பதன் மூலம் சவுகரியமான சூழலை உறுதி செய்யலாம். இதுபோன்ற பராமரிப்புகள் குளிர்காலத்தில் கால்நடைகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
The post கால்நடைகளுக்கான குளிர்கால பராமரிப்பு! appeared first on Dinakaran.