சென்னை,
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது. அக்டோபர் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.
விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்றுக்கொண்ட அரசு, காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6-ந் தேதி (அதாவது நேற்று) வரை நீடித்தது. அதன்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.
விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்கவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.