காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சவுமியா அன்புமணி வலியுறுத்தல்

3 months ago 28

ஜெனிவா,

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 57ம் அமர்வு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகிறது. அதன் 37-ம் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தின் தீமைகள் குறித்தும், அதனால் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "காலநிலை மாற்றம் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும், மிகவும் குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களை பாதிக்கக்கூடிய, அவசரமாக தீர்வு காணப்பட வேண்டிய உலகப் பிரச்சினை ஆகும். பாலின சமத்துவமின்மையும், சுற்றுச்சூழல் சீரழிவும் காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு, குறிப்பாக வேளாண்மை, தண்ணீர் பற்றாக்குறை, சுகாதாரம், ஊட்டச்சத்து, காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் இடம் பெயருதல் ஆகிய துறைகளில் ஏற்படும் பாதிப்புகளை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கச் செய்கிறது.

வேளாண்துறை தொழிலாளர்களைப் பொறுத்தவரை, குறிப்பாக வளரும் நாடுகளில் பெண்களின் பங்கு கணிசமானது ஆகும். வறட்சி, சூறாவளி மற்றும் மோசமான பருவகால நிகழ்வுகளின் எண்ணிக்கையை காலநிலை மாற்றம் அதிகரிக்கச் செய்கிறது. அதன்காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், சுகாதார பாதிப்புகள், கடுமையாக பணி செய்து உடல் சோர்ந்து போதல் போன்றவற்றுக்கு பெண்களை ஆளாக்கி, அதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பெறுதல் ஆகியவற்றுக்கான அவர்களின் நேரத்தைக் குறைத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக, உலகம் முழுவதும் பள்ளிகளின் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் தங்களின் பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் அளவுக்கு அதிகமான பாதிப்புகளுக்கு தீர்வு காண, அவர்களுக்கு கல்வி, சொத்துரிமை, வளங்களை கையாளும் உரிமை, உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் முடிவெடுக்கும் நடைமுறையில் பெண்களை ஈடுபடுத்துதல் போன்றவற்றின் மூலமாக அதிகாரமளிக்க வேண்டியது அவசியமாகிறது.

தொழில் புரட்சி காலத்திற்குப் பிறகு, காலநிலை மாற்றத்திற்கு மிகப்பெரிய அளவில் காரணமாக இருக்கும், வரலாறு காணாத அளவுக்கு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்திற்கு மேலை நாடுகள் தான் காரணமாகும். காலநிலை மாற்றத்திற்கு வளரும் நாடுகளும், தீவு நாடுகளும் மிகக்குறைந்த அளவில் தான் காரணமாக இருக்கின்றன என்ற போதிலும், காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை அந்த நாடுகள் தான் அதிகமாக எதிர்கொள்கின்றன.

எனவே, காலநிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கவும், அதன் மூலம் காலநிலை நடவடிக்கைகளில் பாலின சமத்துவத்தையும், உலகில் அனைவருக்கும் நீடித்த எதிர்காலத்தை உறுதி செய்யவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலகத் தலைவர்களை உளமாற கேட்டுக் கொள்கிறேன்" என்று சவுமியா அன்புமணி கூறினார்.


இன்று (03.10.2024) - ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில், காலநிலை மாற்ற நடவடிக்கை மற்றும் பெண்ணுரிமையை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் சார்பில் உரையாற்றினேன்.! @UN_HRC | #unitednations | #UnitedNationsHumanRights | #geneva | #HRC57 pic.twitter.com/DSKmCLXJ2e

— Sowmiya Anbumani (@Sowmiyanbumani) October 3, 2024

Read Entire Article