கால வரிசைப்படி அனைத்து ஆவணங்களும் இணைப்பு; கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தம் தேவையில்லை: ஒன்றிய அரசுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்

3 hours ago 3

மதுரை: கீழடி அகழாய்வு அறிக்கையில் கால வரிசைப்படி அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, திருத்தம் தேவையில்லை என ஒன்றிய அரசுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்தது. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் இப்பணி நடந்தது. அகழாய்வின்போது 5,765க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த அரிய வகை பொருட்கள் கிடைத்தன.

பண்டை காலத்திலேயே நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழர் வாழ்வியலும் வெளிப்பட்டது. இதையடுத்து அகழாய்வு பணிகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். தற்போது அசாம் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.

இதையடுத்து, ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தப்பட இல்லை. முதல் மற்றும் 2ம் கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரிய வந்துள்ளது.

ஒன்றிய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இதுவரை வெளியிடப்படவில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். இதுதொடர்பான வழக்கு கடந்தாண்டு ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தொல்லியல் அறிக்கையை ஒன்றிய அரசு வௌியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் இதுவரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் தேவையான விபரங்களுடன் திருத்தம் தேவை எனக் கூறி ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒன்றிய அரசுக்கு அளித்துள்ள பதிலில், ‘கீழடி அகழாய்வு அறிக்கையில் கால வரிசைப்படி அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அடுக்குகள் வாரியாகவும், காலவரிசைப்படியும் ஆவணங்களும் இணைப்பில் உள்ளன. கீழடி குறித்த வரைபடம், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர்ந்தபட்ச தெளிவுத் திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இதனால், திருத்தம் தேவையில்லை. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தான் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்தை போக்கிடும் வகையிலான அனைத்து வகையான ஆவணங்களும் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

The post கால வரிசைப்படி அனைத்து ஆவணங்களும் இணைப்பு; கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தம் தேவையில்லை: ஒன்றிய அரசுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article