சென்னை: “உலக சாதனை படைத்த சென்னை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு போதிய அக்கறை காட்டாதது ஏன்? தனியாரின் வருமானத்துக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் விளம்பர மோகத்துக்காகவும் நடத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு காட்டிய முழு அக்கறை ஏன் இந்நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை? என்பதே மக்களின் கேள்வி,” என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உலக சாதனை நிகழ்ச்சியாக சென்னை மெரினாவில் நடந்த விமானப்படையின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள்கள் பங்கு கொள்வார்கள். மக்களுக்கு தேவையான அனைத்து நல்ல உதவிகளையும் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யுங்கள் என ஏற்கனவே மத்திய அரசு தெளிவாக அறிவுறுத்தியும், அதற்கான முறையான ஏற்பாடுகளை, மக்கள் நலத்தை பேணிக் காக்கும் வகையில் தண்ணீர்,உணவு போக்குவரத்து, பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் மிகவும் அஜாக்கிரதையாக தமிழக அரசு செயல்பட்டது. தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு மிகப்பெரிய உதாரணமாய் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.