பெரம்பலூர்: காய்ச்சலுக்கு நாட்டு மருத்து குடித்த 2 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி (38). இவரது மனைவி தனலட்சுமி (33). இவர்களுக்கு கடந்த 11 மாதத்திற்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு ரேஷ்மா, தனுஸ்ரீ என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தைகளுக்கு சில தினங்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்து வந்துள்ளது.
தனலட்சுமியும், மாமியார் சாந்தியும் நாட்டு வைத்தியம் பார்க்க சென்றுள்ளனர். அங்கு நாட்டு வைத்தியர் சைதானி (60) என்பவர் குழந்தைகளை பரிசோதித்து விட்டு, நாட்டு மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இதையடுத்து திடீரென இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து மயக்கமாகினர். நேற்று முன்தினம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை உயிரிழந்தது.
மேல்சிகிச்சைக்கு மற்றொரு குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை அந்த குழந்தையும் இறந்தது. தகவலறிந்த மங்களமேடு போலீசார், 2 குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தனலட்சுமி, சாந்தி, நாட்டு வைத்தியர் சைதானியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காய்ச்சலுக்கு நாட்டு மருந்து: 2 குழந்தைகள் பலி appeared first on Dinakaran.