காயத்தால் அல்ல... 2024 ஐ.பி.எல். தொடரில் பின்வரிசையில் களமிறங்கியது ஏன்..? - தோனி விளக்கம்

2 months ago 13

புதுடெல்லி.

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது.

ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 42 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார்.

அத்துடன் அவர் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அந்த வாய்ப்பிலும் அதிரடியாக விளையாடிய தோனி இறுதி ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். அதனால் அவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காக கொஞ்சம் மேலே களமிறங்க வேண்டும் என்று ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் முழங்கால் வலியால் தோனி மேலே விளையாட முடியாது என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடினால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதியதாக எம்எஸ் தோனி கூறியுள்ளார். அதனாலேயே தங்களுடைய பார்மை காண்பிப்பதற்காக துபே, ஜடேஜாவுக்கு மேல் வரிசையில் விளையாடும் வாய்ப்பை கொடுத்து தாம் 8வது இடத்தில் விளையாடியதாக தோனி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் சமீபத்தில் பேசியது பின்வருமாறு:-"என்னுடைய சிந்தனை மிகவும் எளிது. அதாவது மற்றவர்கள் அவர்களது வேலையை செய்யும்போது நான் ஏன் மேலே பேட்டிங் செய்ய செல்ல வேண்டும். கடந்த ஐபிஎல் தொடர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் சூழ்நிலையில் நடைபெற்றது. எனவே அதில் இடம் பிடிக்க போராடும் வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டியிருந்தது.

எங்கள் அணியில் துபே, ஜடேஜா அதுபோன்ற வீரர்களாக இருந்தனர். எனவே இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக தங்களது திறமையை நிரூபிக்க நாங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். ஏனெனில் ஓய்வு பெற்ற எனக்கு எதுவும் இல்லை. அதனால் நான் பேட்டிங் வரிசையில் கீழே விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. நான் செய்ததில் அணியும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறினார்.

Read Entire Article