
புதுடெல்லி,
பா.ஜ.க. எம்.பி.யாக இருந்து வருபவர் நிஷிகாந்த் துபே. அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, காந்தி குடும்ப தலைமையின் கீழ் ரஷியாவிடம் இந்தியா விற்கப்பட்டது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அவர் சி.ஐ.ஏ. ஆவண பதிவுகளை அடிப்படையாக கொண்டு கூறும்போது, சி.ஐ.ஏ.வின் டைரிகள் மற்றும் மித்ரோகின் ஆகியவற்றில் கிடைத்த தகவலில், மறைந்த காங்கிரஸ் தலைவரான எச்.கே.எல். பகத் மற்றும் 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோவியத் ரஷியா நிதி வழங்கியது என தெரிய வருகிறது.
அந்த டைரிகளில், ரஷியாவால், அவர்களின் விருப்பத்திற்கேற்ப... என 16 ஆயிரம் செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் சுபத்ரா ஜோஷி, 1977-80 ஆண்டு காலகட்டத்தில் ஜெர்மன் அரசிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். தேர்தல் என்ற பெயரில் இந்த தொகையை வாங்கி கொண்ட அவர், அதன்பின்னர் இந்தோ-ஜெர்மன் கூட்டமைப்பின் தலைவராகவும் ஆனார்.
இதனை நீங்கள் பார்க்கும்போது, காந்தியின் குடும்ப தலைமையின் கீழ் ரஷியாவிடம் இந்தியா விற்கப்பட்டு உள்ளது தெரிகிறது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதேபோன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பணம் கொடுத்தேன். அதுவும் இரண்டு முறை என அமெரிக்க தூதர் மொய்நிஹான் அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்றும் மற்றொரு அதிர்ச்சி தகவலை துபே கூறியுள்ளார்.
இதுபற்றி நாடாளுமன்ற ராஜ்யசபையில் 1979-ம் ஆண்டு பேசப்பட்டது. காங்கிரசை எப்படி நிர்வகிக்கலாம், அரசை எப்படி நிர்வகிக்கலாம் என நிக்சன் மற்றும் கிஸ்சிங்கர் இடையேயான தொலைபேசி உரையாடலையும் நான் குறிப்பிட்டு உள்ளேன். இந்த விசயங்கள் அனைத்தும் எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் உள்ளன என்றும் துபே கூறியுள்ளார்.