
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 48). அவரது மனைவி கற்பகம் (40). இவர்களது மகள் குமுதா (27). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது உடன் வேலை செய்த பெங்களூருவை சேர்ந்த அஜித்குமார் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. குமுதா தனது கணவர் அஜித்குமாருடன் காட்டுப்பாக்கம் விஜயலட்சுமி நகர் பகுதியில் தனிக்குடித்தனமாக வசித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று வேலை விஷயமாக அஜித்குமார் பெங்களூரு சென்று விட்டார். வீட்டில் குமுதா குழந்தையுடன் தனியாக இருந்தார்.
அப்போது செல்போனில் தனது பெற்றோரை தொடர்பு கொண்ட குமுதா, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி அழுது புலம்பியதாக தெரிகிறது. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் உடனடியாக குமுதா வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அப்போது கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குமுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில், அவரது 1½ வயது பச்சிளம் குழந்தை அழுதபடி கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இறந்து போன குமுதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி குமுதாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.