எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண், கணவரை பிரிந்து மகள், இரு மகன்களுடன் பரமக்குடியில் வசிக்கிறார். அப்பெண்ணின் 17 வயது மகளும், இதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபரும் சிறுவயதில் இருந்தே பழகியுள்ளனர். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே சிறுமி, நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார். அதனை ஏற்காத அவர், சிறுமிக்கு காதல் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியை எட்டயபுரம் அருகே உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி பாட்டி வீட்டில் தனியாக இருந்த சிறுமி தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது போலீசாரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், ‘சந்தோஷ் தன்னை காதலிக்கும்படி தொந்தரவு கொடுத்தார். நான் மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையாவும் சேர்ந்து என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டனர்’ என கூறியுள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சந்தோஷ் (21), முத்தையா (20) ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே மருத்துவமனையில் நேற்று சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து கைதான இருவர் மீதும் கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காதலிக்க மறுத்ததால் சிறுமி எரித்து கொலை appeared first on Dinakaran.