பூந்தமல்லி, டிச.16: காதலிக்க மறுத்த பெண்ணை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பட்டப்படிப்பு முடித்த இளம்பெண் வளசரவாக்கம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே கல்லூரியில் படித்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (25) என்பவர் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீராமின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்தப்பெண் அவரை விட்டு விலகிச் சென்றார். இருப்பினும், ஸ்ரீராம் அவரை பின் தொடர்ந்து காதலிக்குமாறு கூறி தொடர்ந்து வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்ற ஸ்ரீராம், தன்னை காதலிக்க வற்புறுத்தி பெண்ணை கல்லால் தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராமை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post காதலிக்க மறுத்த பெண்ணை கல்லால் தாக்கிய வாலிபர்: வன்கொடுமை சட்டத்தில் கைது appeared first on Dinakaran.