காட்பாடி அருகே கப்ளிங் உடைந்து கழன்றது இன்ஜின் இல்லாமல் 1 கி.மீ. தூரம் ஓடிய எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்: பயணிகள் அலறல்

3 months ago 13

வேலூர்: காட்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே கப்ளிங் உடைந்து கழன்று, இன்ஜின் இல்லாமல் ஓடிய பெட்டிகளில் பயணிகள் அலறி கூச்சலிட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கொல்கத்தா, விசாகப்பட்டினம், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, கோவை, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 8.40 மணியளவில் ராணிப்பேட்டை அருகில் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தை கடந்த போது திடீரென இன்ஜின் தனியாக கழன்று ஓடியது.

இதனால் ரயில் பெட்டிகள் 1 கி.மீ. தூரம் வரை தனியாக ஓடியது. ரயில் கட்டுப்பாடின்றி ஓடுவதை உணர்ந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இன்ஜினை உடனடியாக நிறுத்த முடியாத நிலையில், பின்னால் வரும் ரயில் பெட்டிகள் வந்து மோதும் அபாயம் ஏற்படும் என்பதாலும், டிரைவர் தொடர்ந்து இன்ஜினை இயக்கினார். பயணிகள் பெட்டி தானாக நின்றதும், சிறிது தூரத்தில் இன்ஜினையும் டிரைவர் நிறுத்தினார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரக்கோணம், காட்பாடி ரயில் நிலையங்களில் இருந்து ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள் விரைந்து சென்று இன்ஜினையும் பெட்டிகளையும் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் கழன்று ஓடிய இன்ஜினை ‘ரிவர்ஸ்’ எடுத்து சென்று பெட்டிகளுடன் இணைக்க முடிவு செய்தபோது ‘கப்ளிங்’ உடைந்து விழுந்திருப்பது தெரியவந்தது.

இதனால் அந்த இன்ஜின் திருவலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு பெட்டிகளுடன் காலை 10.50 மணியளவில் இணைத்தனர். பின்னர் ரயில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றது. இன்ஜின் தனியாக கழன்று சென்றபோது சம்பவ இடத்தில் நடக்கும் பால பணியால் ரயில் வெறும் 20 கி.மீட்டர் வேகத்தில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

* வந்தே பாரத் ரயில் இன்ஜினில் புரோகிராமை மாற்றிய ஊழியர் கைது
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவையில் இருந்து சென்னைக்கும், பெங்களூருவிற்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் இணைத்து இயக்குவதற்காக வந்தே பாரத் மாற்று இன்ஜின் ஒன்று, எப்ேபாதும் கோவை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த மாற்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்ஜினில் நேற்று முன்தினம் அதிகாலையில், லோகோ பைலட்டுகள் ஏறினர்.

அப்போது, ரயில் இயக்கத்திற்கான புரோகிராம் அனைத்தும் மாற்றி வைக்கப்பட்டிருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லோகோ பைலட்டுகள், உடனடியாக சேலம் கோட்ட இயக்கப்பிரிவு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, அந்த இன்ஜினில் மர்மநபர் ஏறி, ரயில் இயக்கத்திற்கான புரோகிராமை மாற்றி வைத்திருப்பது தெரியவந்தது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து புரோகிராமை மாற்றிய கோவை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள லோகோ பைலட்டுகளுக்கான ஓய்வறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர் ஹரிகரன் (28) என்பவரை ஆர்பிஎப் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர், குடிபோதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்ஜினில் ஏறி புரோகிராமை மாற்றி அமைத்தது தெரியவந்தது.

The post காட்பாடி அருகே கப்ளிங் உடைந்து கழன்றது இன்ஜின் இல்லாமல் 1 கி.மீ. தூரம் ஓடிய எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்: பயணிகள் அலறல் appeared first on Dinakaran.

Read Entire Article