காட்டுயானைக்கு பலா பழங்களை பறித்துப்போட்ட குரங்குகள்.. தொழிலாளர்கள் வியப்பு

6 hours ago 2

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இதில் காட்டுயானைகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது இடம்பெயர்ந்து செல்லும். இப்படி இடம்பெயர்ந்து செல்லும் காட்டுயானைகள் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் முகாமிடுவது வழக்கம். அதன்படி வால்பாறை அருகே பழைய வால்பாறை, குரங்குமுடி எஸ்டேட், வரட்டுப்பாறை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டுயானை ஒன்று, அங்குள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள பலா மரங்களில் இருந்து பழங்களை துதிக்கையை உயர்த்தி பறித்து தின்று கொண்டு இருந்தது.

துதிக்கைக்கு எட்டாத உயரத்தில் இருந்த பலாப்பழங்களை பறிக்க முடியாமல் திணறியது. இதை அங்குள்ள பலா மரங்களில் தாவிக்குதித்து விளையாடி கொண்டு இருந்த சிங்கவால் குரங்கு கூட்டம் கவனித்தது. பின்னர் காட்டுயானை பழங்களை பறிக்க முயற்சிக்கும் பலா மரத்துக்கு வந்தது. தொடர்ந்து மரத்தில் இருந்த பலாப்பழங்களை ஒவ்வொன்றாக பறித்து கீழே போட்டது.

அந்த பலாப்பழங்களை காட்டுயானை ருசித்து தின்றது. இந்த காட்சியை தேயிலை தோட்டத்தில் பணியாற்றிவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த தொழிலாளர்கள் கண்டு நெகிழ்ச்சியில் வியந்து போயினர். அதனை மானாம்பள்ளி வனத்துறையினரும் கண்டு ரசித்தபடி அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Read Entire Article