காட்டுமன்னார்கோவில் அருகே 2 முதலைகள் கடித்து மீனவர் படுகாயம்

3 hours ago 3

 

காட்டுமன்னார்கோவில், மார்ச் 19: மீன் பிடிக்க கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய மீனவரை 2 ராட்சத முதலைகள் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குஞ்சமேடு கிராமம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன்(52). இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் மனோகரன் முட்டம் மேலத்தெருவில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்க தண்ணீரில் இறங்கி உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 500 கிலோ எடையுள்ள 2 ராட்சத முதலைகள் இவரின் கை, கால்களை கவ்வி பிடித்து தண்ணீருக்குள் இழுத்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பதறிப்போய் காப்பாற்றும்படி கூறி அலறி கூச்சலிட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து போராடி முதலைகளை விரட்டி விட்டு, படுகாயமடைந்த மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு கை, தொடை பகுதியில் பலத்த காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனத்துறை அதிகாரிகள் அன்புமணி, செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதுபோல நேற்றுமுன்தினம் குமராட்சி பகுதியில் உள்ள கான்சன் வாய்க்காலில் கை, கால் கழுவ சென்ற சாரதி என்ற மாணவரை முதலை கவ்வியதில் படுகாயமடைந்த அவர் சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 10க்கும் மேற்பட்ட ஆடுகளை முதலை இழுத்து சென்றுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மனிதர்களை தாக்கும் முதலைகளால் இப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் இங்குள்ள முதலைகளை வனத்துறையினர் உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காட்டுமன்னார்கோவில் அருகே 2 முதலைகள் கடித்து மீனவர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article