சென்னை: காட்டுப் பன்றிகளால் வேளாண் பயிர்கள் சேதமாவதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள மதிமுக சார்பில் அளிக்கப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது நேற்று விவாதம் நடந்தது நம்பிக்கை அளிக்கிறது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார். இதன் மூலம் காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளின் விடியலுக்கு வழி வகுத்திருக்கிற தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காப்புக்காடுகளிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களில் ஊடுருவினால் வனத்துறையின் மூலம் அவற்றை சுடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நடவடிக்கையினால் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது மிக மிக சிரமமானது. தற்காலிகமாக, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையை உடனடியாக செயல்படுத்துவதுடன், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு முழுமையான தீர்வு காணவும் அரசு ஆவன செய்ய வேண்டும். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி விவசாய்களுக்கு நிரந்தரமான தீர்வு வழங்க வேண்டும். காட்டுப் பன்றிகளை யார் வேண்டுமானாலும் கொல்ல அனுமதித்தால் மட்டும் தான் மிக அதிகமாக இனப்பெருக்கம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post காட்டுப் பன்றி தொடர்பாக மதிமுக அளித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது விவாதம் நம்பிக்கை அளிக்கிறது: துரை வைகோ எம்.பி நன்றி appeared first on Dinakaran.