காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகளை ஒட்டி மின் வேலி அமைக்க மக்கள் கோரிக்கை

4 hours ago 1

கூடலூர் : காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகளை ஒட்டி மின் வேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

யானைகள் வருவதை கண்காணித்து கிராம மக்களுக்கு தெரிவிக்கவும், யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கவும் வனத்துறை சார்பில் பல்வேறு நவீன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யானைகள் வழக்கமாக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதன் மூலம் பொதுமக்களின் அலைபேசிகளுக்கு குருஞ் செய்தி அனுப்பும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

முதுமலை வன எல்லை தொரப்பள்ளி முதல் போஸ்பாரா மற்றும் செலுக்கடி பகுதியை ஒட்டி தேவர் சோலை வாச்சுக்கொல்லி வரை அகழிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகழிகளை யானைகள் பல இடங்களில் தூர்த்து அதன் வழியாக ஊருக்குள் வந்து விடுகிறது.

மேலும் மழைக்காலங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு சில இடங்களில் அகழிகள் மண்மேடாகி விடுகின்றன.வன எல்லையில் அமைக்கப்படும் அகழிகளை தாண்டி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகளை ஒட்டி மின் வேலி அமைக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் இதனை வனத்துறைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ‘‘தமிழக பகுதியை ஒட்டிய கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள கடுவூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் சார்பில் அகழிகளை ஒட்டி மின் வேலி அமைத்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

யானைகள் மின் வேலியை கடந்து வெளியேறாமல் இருக்கவும் வேலியை உடைத்து சேதப்படுத்தாமல் இருக்கவும் தொங்கும் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.இதனால் யானைகள் ஊருக்குள் வருவது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அகழிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக யானைகள் அகழிகளை தாண்டி வெளியேறுவது இல்லை. இதனையே விவசாயிகளாகிய நாங்கள் தொடர்ந்து வனத்துறைக்கு வலியுறுத்தி வருகிறோம்.

யானைகள் ஊருக்குள் சுற்றுவதால் அந்த யானைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, வனத்துறையினர் இது போன்ற எளிய முறைகளை ஆய்வு செய்து கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளில் இதே நடைமுறையை பின்பற்றினால் யானைகள் ஊருக்குள் வருவதை வெகுவாக குறைத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கலாம்’’ என்றனர்.

The post காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகளை ஒட்டி மின் வேலி அமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article