காட்டு யானைகளுடன் வலம் வரும் புல்லட் யானை: டிரோன் மூலம் தீவிரமாக கண்காணிப்பு

4 hours ago 2

கூடலூர்: 8 காட்டு யானைகளுடன் வலம் வரும் புல்லட் யானையை டிரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை, வன பணியாளர்கள் மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் மீண்டும் யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், 35-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. அதில், ‘புல்லட்’ என்று அழைக்கப்படும் யானை தொடர்ந்து குடியிருப்புகளை இடித்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை துாக்கி செல்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குள், 35 வீடுகளை இடித்து, மனிதர்களையும் தாக்கி வருகிறது.

இந்தசூழலில், கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து வீடுகளை இடித்து வந்த நிலையில், வனத்துறையினர் இரு கும்கி யானைகள் உதவியுடன், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில்,75 வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கும்கி யானைகளை பார்த்தவுடன், புல்லட் யானை வனப்பகுதிக்குள் பதுங்கியது. இதனால். யானை வேறு பகுதிக்கு சென்று விட்டது என, வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி ‘டான்டீ’- பகுதியில் ஆறு வீடுகளை இதே யானை இடித்து சேதப்படுத்தியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று காலை, வன பணியாளர்கள் மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் மீண்டும் யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அரசு தேயிலை தோட்டத்தில் 8 காட்டு யானைகளுடன் வலம் வரும் புல்லட் யானையை டிரோன் மூலம் தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்கும் முயற்சியில் வன குழுவினர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post காட்டு யானைகளுடன் வலம் வரும் புல்லட் யானை: டிரோன் மூலம் தீவிரமாக கண்காணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article