காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணியின்போது, மண்ணுக்குள் இருந்து கண் டெடுக்கப்பட்ட 4 அடி உயர முருகன் சிலையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், 17 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடந்து வருகிறது. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணி வேகமெடுத்துள்ள நிலையில், நான்காம் பிரகாரத்தில் சீரமைப்பு பணிக்காக, கோயில் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது, மண்ணுக்கு அடியில் சிலை ஒன்று தென்பட்டுள்ளது. ஆழப்படுத்தி பார்த்தபோது, முருகன் சிலை என்பது தெரியவந்தது. கருங்கல்லில் செய்யப்பட்ட 4 அடி உயரமுள்ள சிலை மண்ணுக்கு அடியில் இருந்தது பக்தர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலையை கைப்பற்றி கோயில் ஊழியர்கள் பாதுகாப்பாக கோயிலில் வைத்துள்ளனர். ஏற்கனவே, ஏகாம்பரநாதர் கோயிலில் 16 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது முருகன் சிலை கிடைத்துள்ளது. சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் கோயிலில் வைக்கப்பட்டுள்ள முருகன் சிலையை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.இதுகுறித்து கோயில் அதிகாரியிடம் கேட்டபோது, ”கோயில் செயல் அலுவலரிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளோம். தொல்லியல் துறை அதிகாரிகளையும் வர வழைக்க இருக்கிறோம். அவர்கள் வந்து ஆய்வு செய்தால்தான், இந்த சிலை எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவரும்” என கூறினார்.
இந்தநிலையில் நேற்று கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரகுரு, தொல்பொருள் அதிகாரிகள், சிலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள், மண்ணுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலையை ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுக்கு பின் முழு விவரம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணியின்போது 4 அடி உயர முருகன் சிலை கண்டுபிடிப்பு: அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.