காஞ்சி, செங்கல்பட்டு ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்: வடமாலை சாத்தி பக்தர்கள் வழிபாடு

3 weeks ago 4

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, உற்சவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடமாலை சாத்தி சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், காஞ்சிபுரம் தேரடியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில், முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் பின்புறத்தில் அமைந்துள்ள 18 அடி உயர பிரசன்ன ஆஞ்சநேயர், ஸ்ரீ சுந்தர வரதராஜபெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர், ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர், உத்திரமேரூர் அடுத்து மருதத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சடமாலை சாத்தி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், செங்கல்பட்டு அடுத்து தேவனூர் ஆஞ்சநேயர் கோயில், திருப்போரூர் அருகே அமைந்துள்ள புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோயில், கல்பாக்கம் அருகே பெருமாள்ச்சேரியில் அமைந்துள்ள பக்த ஆஞ்சநேயர் கோயில், நெய்குப்பி ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

* 108 பால்குடம் எடுத்து வழிபாடு
மதுராந்தகம் சூரக்கோட்டை பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் அனுமனுக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணியளவில் தர்மராஜா கோயில் அருகில் இருந்து 108 பால்குட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து பால்குடங்களை தலையில் சுமந்தபடி நரசிம்மர் ஆலயம் சென்று அனுமனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாலை 5 மணியளவில் அனுமனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரமும், ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

The post காஞ்சி, செங்கல்பட்டு ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்: வடமாலை சாத்தி பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article