காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குச் சொந்தமான சிலை.. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

1 month ago 14

சென்னை,

காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குச் சொந்தமான தொன்மை வாய்ந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான சோமஸ்கந்தர் உலோகச் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஏசியன் ஆர்ட் மியூசியத்தில் இருப்பதை சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன், சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் இணையதளங்களில் ஆய்வு செய்து குறிப்பிட்ட சோமஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட கலைக்கூடத்தில் இருப்பதை உறுதி செய்தனர். அந்த சிலையின் படமும் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அந்த சிலையில் தெலுங்கிலான எழுத்துகள் காணப்பட்டது. அந்த எழுத்துகளை படித்து பார்த்த போது அந்த சிலை காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த சிலை கி.பி. 1500 முதல் 1600-க்குள் செய்யப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டது. அந்த சிலையை தொண்டைமண்டலத்தை சேர்ந்த வெங்கட்ராமநாயனி என்பவர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு கொடுத்துள்ளார் என்பதும் சிலையில் காணப்பட்ட எழுத்துகள் மூலம் தெரிய வந்தது.

அந்த சிலையின் சர்வதேச மதிப்பு ரூ.8 கோடி என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மர்ம நபர்கள் யாரோ அந்த சிலையை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து திருடி அமெரிக்காவுக்கு கடத்தி சென்று கோடிக்கணக்கான விலைக்கு விற்றுள்ளனர். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சிலையை அமெரிக்காவில் இருந்து மீட்டு கொண்டு வருவதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலை விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Read Entire Article