காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோயிலில் நடந்த 108 பால்குடம் திருவிழாவில், ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி வெள்ளக்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்தவெளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கடந்த 9 நாட்களாக நவராத்திரி பெருவிழா நடைபெற்று, அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. நவராத்திரி பெருவிழா முடிவுற்ற நிலையில், நேற்று சந்தவெளி அம்மனுக்கு மகா சாந்தி ஓமம் பூஜை செய்யப்பட்டது. முன்னதாக, சந்தவெளியம்மன் கோயிலில் 108 பால்குடம் விழாவையொட்டி, ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து 108 பெண்கள் சிவமேள தாளங்கள் முழங்க, பம்பை ஒலி ஒலிக்க பால்குடம் எடுத்து வந்தனர். ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டு மேற்கு ராஜவீதி சன்னதி தெரு அரக்கோணம் சாலை வழியாக வெள்ளக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ சந்தவெளி அம்மன் கோயிலுக்கு ஊர்வலம் வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சந்தவெளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. பால்குடம் விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுமதி ஜீவானந்தம், உறுப்பினர்கள் தேவராஜ், நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
The post காஞ்சி அம்மன் கோயிலில் பால்குடம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.