நியூயார்க் : 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பழி தீர்ப்பதாக கூறி காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை பசி, பட்டினியில் தள்ளி உள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இஸ்ரேல், காசா போருக்கு 54,000 பாலஸ்தீனியர்களும் 1,100 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுவிட்டனர். உணவு மற்றும் மனிதாபிமான பொருட்களை கொண்டு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்துவிட்டு 77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். கையில் இருந்தவற்றை எல்லாம் இழந்துவிட்டு பாலஸ்தீனிய மக்கள், பசி கொடுமையால் இப்படி கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
காசா பிடித்து வைத்துள்ள பிணை கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் வரை போர் ஓயாது என்று சூளுரைத்துள்ள இஸ்ரேல், அகதிகள் முகாம், மருத்துவமனைகள், குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கிறது. பாஸ்தாவை ஊறவைத்து மாவாக்கி, அதில் சப்பாத்தி செய்து வயிற்றை நிரப்பி கொண்டு இருக்கின்றனர். காசாவில் இருக்கும் 30% குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருக்கின்றன. 5 வயதுக்குட்பட்ட 71,000 குழந்தைகள், பட்டினியால் உழல்ந்து கொண்டு இருப்பதாக ஐ.நா. கூறுகிறது. கர்ப்பிணிகளும் பிறந்த சில மாதங்களே ஆன குழந்தைகளும் உணவு கிடைக்காமல் மரணத்தின் விளிம்பில் இருக்கின்றனர்.
மனிதாபிமான பொருட்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட மார்ச் 2 முதல் இதுவரை 57 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். பசியால் 20 லட்சம் பேர் வாடி கொண்டு இருக்க உணவுப் பொருட்களுடன் எல்லையில் ட்ரக்குகள் காத்து கிடக்கின்றன. இதனிடையே காசாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாவிட்டால் 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post காசாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாவிட்டால் 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் : உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை appeared first on Dinakaran.