காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்; நிவாரண உதவி பெற காத்திருந்தவர்கள் உள்பட 94 பேர் உயிரிழப்பு

6 hours ago 5

காசா,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 57 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணயக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக காசாவில் மிக மோசமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. காசா மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட உணவு பொருட்களை சுமார் இரண்டரை மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது. மே மாதம் முதல் மிகச் சிறிய அளவில் மட்டுமே காசாவிற்குள் உணவுப்பொருட்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த வான்வழி தாக்குதல்களில் 94 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சுமார் 45 பேர் நிவாரண உதவிக்காக காத்திருந்தபோது தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

Read Entire Article