காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி

3 months ago 20

காசா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்தது. இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 42 ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா முகாம் மீது நேற்று மாலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 21 பெண்கள் அடங்குவர் என்றும் இடிபாடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு அடியில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டதால் உயிரிழப்பு 50ஐ நெருங்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் 85 பேர் காயமடைந்தனர், அவர்களில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக ஊடக அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Read Entire Article