காசா முகாம் மீது இஸ்ரேல் குண்டுவீசியது: 28 பேர் பரிதாப பலி

3 months ago 16

டெய்ர் அல் பலா: காசாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்கும் முகாமாக செயல்பட்ட பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 28 பேர் பரிதாபமாக பலியாகினர். காசாவில் ஓராண்டாக ஹமாசுக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஒருவாரமாக தாக்குதலை மீண்டும் தீவிரமாக்கி உள்ளது. இந்நிலையில், டெய்ர் அல் பலா நகரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்கும் முகாமாக செயல்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை, 7 பெண்கள் உட்பட 28 பேர் பலியாகினர். 54 பேர் படுகாயமடைந்தனர். இப்பள்ளியில் பொதுமக்களுக்கு மத்தியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. ஏற்கனவே இதுபோல பல தங்குமிடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

இத்தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்ட அல் அக்சா மருத்துவமனையில் குடும்பத்தினர் கதறி அழுதனர். ‘நாங்கள் உலகிற்கு முறையிடுகிறோம். நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம்’ என ஒருவர் கதறினார். இதுதவிர, லெபனானில் ஐநா அமைதி காக்கும் படையின் 3 நிலைகள் மீதும் இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 2 அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததாகவும் ஐநா அதிகாரி தெரிவித்தார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை நேற்று கூடி விவாதித்தது.

 

The post காசா முகாம் மீது இஸ்ரேல் குண்டுவீசியது: 28 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article