காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது

1 week ago 3

புதுடெல்லி,

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2010-11-ம் ஆண்டில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தது. அடுத்த கணக்கெடுப்பு 2020-21-ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை.

இந்த கணக்கெடுப்பு எப்போது நடைபெறும்? என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. அதேநேரம் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கடந்த 2 தினங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு பற்றி விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிற்து. பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க கடந்த 24-ந் தேதியும் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article