புதுடெல்லி,
அரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. இதில், அரியானாவில் பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
அவர் பேசும்போது, காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி கட்சி. அது தன்னுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளையே விழுங்கி விடும். மக்கள் தங்களுடைய சொந்த பாரம்பரியங்களை வெறுக்கும், தேசிய அமைப்புகளை சந்தேகிக்கும் வகையிலான நாட்டை உருவாக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
நாட்டு மக்கள் பெருமை கொள்ளக்கூடிய ஒவ்வொரு விசயத்தின் நன்மதிப்பையும் சீர்குலைக்க விரும்புகிறது என்றார். அது நாட்டின் தேர்தல் ஆணையம் ஆகட்டும், போலீஸ், நீதிமன்றம் ஆகட்டும் ஒவ்வொரு அமைப்பையும் களங்கப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது என்று பேசியுள்ளார்.
நாட்டில், மக்களை தவறாக வழிநடத்தவும் காங்கிரஸ் முயற்சித்து உள்ளது என்றும் பிரதமர் மோடி குற்றச்சாட்டாக கூறியுள்ளார். அரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தபோது, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொது செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், அரியானா சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் பற்றிய உண்மையான மற்றும் சரியான எண்ணிக்கையை கொண்ட தகவலை தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் அல்லது செயலியில் அடுத்தடுத்து வெளியிடும்படி அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
இதனால், பொய்யான செய்திகள் மற்றும் கெட்ட நோக்கத்துடனான தகவல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார். இதற்கு முன், காலை 9 முதல் 11 மணி வரையிலான 2 மணிநேரம் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் விவரிக்கப்படாத வகையிலான காலதாமதம் காணப்பட்டது. இதனால், தேர்தல் நடைமுறையை வலுவிழக்க செய்யும் வகையில், சிலர் பொய்யான தகவல்களை சமூக ஊடகத்தில் பரப்புவதற்கு அனுமதித்து விடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதற்கு, நம்பத்தக்க சான்றுகள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறுகிறது என தேர்தல் ஆணையம் பதில் அளித்து இருந்தது.